கறுப்பு நிலா..!




கண்ணகியே தாயே
கறுப்பான இரும்பிடையே………

உள்ளபடி உன்வாழ்க்கை உலகுக் குதவாத
செல்லுபடி ஆகாத சிறுகாசு தானென்பேன்
உண்ணுகின்ற சோற்றில் உமியொட்டி இருத்தல்போல்
பொன்மகளே உன் வாழ்வும் புழுதி படிந்ததென்பேன்

தொட்டு மாலையிட்டோர் தோகையரைக் கூடியபின்
விட்டுப்பிரிந்து வேறுதிசை போனாலும்
கண்ணீரைத் தினம் சிந்திக் கண்மூடி வாழ்வதுதான்
பெண்டிர்க்குக் கற்பென்று பேசினால் அக்கற்பே
இந்த உலகத்தில் இல்லா தொழியட்டும்
சுந்தையிலும் விலைபோகாச் சரக்காகிப் போகட்டும்

கட்டில் சுகம்காணக் காளையவன் செலும்போதே
தட்டிக் கேட்டிருந்தால் தவறியிருப்பான?
பெட்டிப் பாம்பாகப் பேசா திருந்ததுதான்
கட்டழகே நீசெய்த கடுங்குற்றம் முதற்குற்றம்

அளவாக தீயெரிந்தால் அதனை விளக்கென்போம்
அளவுக்கு மீறிவிட்டால அதனை நெருப்பென்போம்
அளவுக்கு மேல்பொறுமை அன்னமே நீ காட்டியதால்
களவுக்கு போனதம்மா காத்துவைத்த உன்சொத்து

மேகக் கதையதனை முடித்தவிட்டே உன் கணவன்
வேகமாய் உனைநாடி வீடுதேடி வந்தவுடன்
“சிந்தைநிலாக் காவலரே சிலம்பிதனை நாடித்தான்
வந்தீரோ?” என்றுனது வாய்நிறையத் தேன்வழியச்
சொன்னாயே பாவி சுவையொழுக சிலம்புதனை
அன்னவனின் கைமீது அளிக்கத் துணிந்தாயே

பத்தினியாய் நீயிருந்தும் பயனில்லை உண்மையிலே
பித்தம் பிடித்தள்;நீ பேதை பெரும்பேதை
அநியாயக் காரனுக்கே ஆரத்தி எடுத்தவள் நீ
கனியென்றே எண்ணி கருங்கல்லைக் கடித்தவள் நீ

தாய்க்குலமே தாய்க்குலமே தங்கமகன் சொல்லுகிறேன்
வாய்ச்சாலக் காரனென்றென் வார்த்தையினைத் தள்ளாதீர்
கற்பொன்றில் மட்டும் கண்ணகியைப் போலிருங்கள்
மற்றவற்றில் அந்த மடமகளை மறந்திடுங்கள்….

                                            -வைரமுத்து (1971)
(கறுப்பு நிலா- கவிதையில் எனக்குப் பிடித்த சிலவரிகள்..)




*****  *****  *****  ***  *****  *****  ***** 

0 comments:

Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by Blogger Templates Gallery