உன்னோடு நான் இருந்த ....!



உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் 
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே..! 
தொண்ணூறு நிமிடங்கள் தொட்டனைத்த காலம்தான் 
எண்ணூறு ஆண்டுகளா இதயத்தில் கனக்குதடி..!


பார்வையிலே சில நிமிடம் பயத்தோடு சில நிமிடம்
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்..!
இலக்கணமே பாராமல் எல்லா இடங்களிலும் 
முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்..!


எத்தனையோ ஆண்டுகளின் இடைவெளியை
இறுக்கி குறைக்கின்ற எத்தனத்தில் சிலநிமிடம்..! 
கண்ணேடும் மூக்கோடும் கன்னக் கதுப்போடும்
அடையாளம் காணும் ஆனந்தம் சிலநிமிடம்..!


இந்த விழிதானே என்னுயிரைத் தின்றவிழி
இந்த முகம்தானே என்கனவில் தோன்றும்முகம்..!
இந்த கரம்தானே எட்டாமல் போனகரம்
இந்த விரல்தானே இல்லையென்று போனவிரல்..!


இந்த குழல்தானே இதயத்தை இழுத்தகுழல்
இந்த எழில்தானே என்னைஎழுத வைத்தஎழில்..!
ஒவ்வொன்றாய் தொட்டு உயிர்வீங்க  முத்தமிட்டு
செவ்வாயின் ஓரம்வரச் சிதறியதே என்ஆவி..!


பேசாமல்போன பெருங்காதல் அத்தனையும்
கூசாத வார்த்தைகளால் கொட்டிவிட தோன்றியதே..!
நில்லென்று சொல்லும் நீலமணிக் கண்ணுக்குள்
சில்லென்று குதித்துச் செத்துவிடத் தோன்றியதே..!


கண்கள் துடித்ததிலே காதல் தெரிந்ததடி
கைகள் நடுங்கியதில் காமம் புரிந்ததடி..!
காதலைத் தண்டிக்கக் காலம் பிடித்ததடி
காலத்தைக் தண்டிப்போம் கண்ணே வளைந்துகொடு..!


எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை 
அது இரவா அது பகலா அது பற்றி அறியவில்லை..!
யார் தொடங்க யார் முடிக்க ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம் இதுவரைக்கும் கேள்வியில்லை..!


அச்சம் களைந்தேன் ஆசையை நீ அணிந்தாய் 
ஆடை களைந்தேன் வெட்கைத்தை நீ அணிந்தாய்..!
கண்ட திருக்கோலம் கனவாக மறைந்தாலும் 
கடைசியிலே அழுத கண்ணீர் கண்ணில் இன்னும் கொட்டுதடி..!


உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் 
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே..!
                                    
                                                                      -வைரமுத்து(1995)


*****  *****  *****  ***  *****  *****  ***** 

0 comments:

Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by Blogger Templates Gallery