மனிதா
விலங்கை வணங்கு
குறிப்பாக
குரங்கை கும்பிடு
உன் மூதாதைக்கு
முதல் வணக்கம் போடு
ஒவ்வொரு விலங்கும்
உன் ஆசான்
***
விலங்குகள் நம்மினும்
மானமுள்ளவை
யானையின் காலில்
யானை விழுந்ததாய்
தகவல் இல்லை
பூனைக்கு எலிகள்
பல்லக்குச் சுமந்ததில்லை
கரடிக்கு மான்கள்
கால்பிடித்து விட்டதில்லை
ஒன்று
சுதந்திரத்தின் வானம்
இல்லை
மரணத்தின் பள்ளம்
இடைப்பட்ட வாழ்க்கை
விலங்குக்கில்லை
***
காட்டுக்குள்
மூட நம்பிக்கையில்லை
அங்கே
நெருப்புக் கோழி கூடத்
தீமிதிப்பதில்லை
***
மனிதா
நீ என்னதான் ஒப்பனைசெய்
மனிதஜாதியில் பெண்தான் அழகு
ஆன்களில் அழகு வேண்டுமா?
விலங்கைத் தவிர வேறுவழியில்லை
மான்களில் கொம்பு கலைமானுக்கு
யானையில் தந்தம் களிற்றுக்கு
மயில்களில் தோகை ஆன் மயிலுக்கு
கோழியில் கொண்டை சேவலுக்கு
ஆண் ஜாதிக்கு மரியாதை
நாட்டுக்குள் இல்லை மனிதா
காட்டுக்குள்தான்.
***
மனிதா
கடவுளர் வாகனம்
கவனித்தாயா?
ஒரு கடவுள் - காளை கொண்டான்
ஒரு கடவுள் - மயில் கொண்டான்
ஒரு கடவுள் - எலி கொண்டான்
ஒரு கடவுள் - கருடன் கொண்டான்
எந்தக் கடவுளையும்
விலங்கு சுமந்ததன்றி
மனிதன் சுமந்ததில்லை
மனிதனைச் சுமக்கச் சொன்னால்
கடத்திவிடுவான்னென்று
கடவுளுக்குத் தெரியாதா?
மனிதன் கடவுளை நம்புகிறான்
கடவுள் மனிதனை நம்பவில்லை
***
விலங்குளை நேசியுங்கள்
அவை
அன்புக்கு ஏங்கும்
ஐந்தறிவு குழந்தைகள்
-வைரமுத்து (1996)
***** ***** ***** *** ***** ***** *****
Vilakam mattum sollunga